-அப்ரா அன்ஸார்-

(ஊடக விளங்கறிவு மையம்(Cmil) நடாத்திய Reform watch நிகழ்ச்சியின் Expert talk இல் பெண் உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.)

பெண் எனும் சொல்லில் தனித்துவமான மரியாதை கலந்துள்ளது.இதனாலே பெண் என்பவள் இயல்பிலேயே மென்மையானவள் என்ற கண்ணோட்டம் இருக்கின்றது.பெண் எனும் சொல் பல பொருள்களை உணர்த்துகின்றன.பால் வகுப்பில் 'பெண் பால்' எல்லா உயிரினங்களினதும் பெண் பாலாரை வயது வேறுபாடின்றி குறிக்கின்றது.மனித இனத்தில் பெண்ணுரிமை , பெண்ணியம் போன்ற சொற்கள் வயது வேறுபாடின்றி எல்லாப் பெண்களையும் குறிக்கின்றது.எனினும் பொது வழக்கில் பெண் எனும் போது அது வளர்ச்சியடைந்த மனித இனத்துப் பெண்பாலரையே பெரும்பாலும் குறிக்கின்றது.இவை சங்க கால இலக்கியம் மற்றும் பழமை தமிழில் பல்வேறுபட்ட கருத்தில் எழுதப்பட்டதாகும்.பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக , அரசியல், பொருளாதார நடைமுறைகள் , கட்டமைப்புகள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் கவலைப்படுத்தும் சமூக, கலாச்சார, அரசியல் , இயக்கங்கள் ,செயற்பாடுகள் , கோட்பாடுகளின் தொகுப்பாகும்.சமத்துவமின்மையின் மூலங்கள் சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள் , பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது , கேள்விக்குட் படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.பால் அடையாளங்களான ஆண், பெண் போன்றவை வாதங்களும் உண்டு.எனினும் இன்று பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் ஏராளம்.அதை நாம் நாளுக்கு நாள் பார்க்கின்றோம்.

பெண் உரிமைகள் என்பது அனைவரினதும் உரிமைகளையும் ,சுதந்திரங்களையும் குறித்து நிற்கின்றது.இந்த உரிமைகள் ‌சட்டமாக்கப்படாது இருக்கலாம்.சமூகத்தில் இயல்பாக கொடுக்கப்படுகின்ற உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.ஆணாதிக்க சமூகத்தினால் பெண்களின் உரிமைகள் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.எனவே பெண்கள் இந்த உரிமைகளைப் பெற ஓர் எதிர் சாய்நிலை அமைந்துள்ளதையும் காணலாம்.பெண்களின் உரிமைகள் என்பது பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபடுதல் , வாக்குரிமை ‌, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை , சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது , குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை ,கல்வி உரிமை ஆகியவற்றை கூற முடிகின்றது.

அரசியலமைப்பில் பெண்கள் உரிமை பற்றி கூறப்பட்டிருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தாமலே இருக்கின்றது. இலங்கையில் இருக்கும் அனைவரும் சாதி, மதம், இனம் ,மொழி கடந்து சட்டத்துக்கு முன் சகலரும் சமமானவர்கள் என்று தான் எனினும் பெண்களை பொறுத்தவரை அவர்கள் இங்கு சமமானவர்களாகவே கருதப்படவில்லை. வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டால் சுகாதாரத் துறை (PHI) ஊழியர்கள் முழுவதுமே ஆண்களாகத்தான் இருக்கின்றனர். "போஸ்ட்மேன்" எடுத்தால் பெயரிலேயே "மேன்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தொழில்களுக்கு பெண்கள் விண்ணப்பித்தாலும் அவர்களை தெரிவு செய்வதில்லை. இதே மாதிரி தான் தாதியர் தொழில்களிலும் 96 %மானவர்கள் பெண்களாகவும் ஏனையவர்கள் ஆண்களாகவும் இருக்கின்றார்கள். இதெல்லாம் சமமற்றதாக உள்ளது .எனவே அரசியலமைப்பில் கூறப்படுகின்ற படி கொள்கைகளும், சட்டங்களும் சமமாக வகுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் 2005 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

இந்த வன்முறையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனினும் அதற்கான வசதி வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பது குறைபாடாக உள்ளது.இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்பை எடுத்தால் அங்கு ஆண், பெண் என்று இல்லாது பிரஜைகளுக்கான உரிமைகளாகவே இருக்கின்றது. அவ்வாறு இருந்தால் இந்த திட்டத்திலேயே மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் இவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே பிரச்சினை இருக்கின்றது.அதாவது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கொள்கை வேண்டும் அதே போல அவற்றை நடைமுறைப்படுத்த சட்டங்கள் தேவை, பெண்களின் சுகாதாரம் தொடர்பான தேவைகளை எடுத்துக் கொண்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரம் தான் இலவச மருத்துவ முகாம்கள் இருக்கும். அவர்கள் குழந்தையை பிரசவிக்கும் வரை தான் அந்த பெண்ணின் உடல்நிலை பற்றி அக்கறை அரசுக்கு இருக்கும். பிள்ளை பேரு தாண்டி விட்டால் நீ எனக்கு அவசியமில்லை. திருமணமாகி பிள்ளை பிறக்காவிட்டால் நீ எனக்கு அவசியமில்லை என்றவாறு தான் நாட்டினுடைய சுகாதார வசதிகள் அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே பெண்கள் சம்பந்தப்பட்ட மார்பக புற்றுநோய் ,கர்ப்பக புற்றுநோய் இன்று அதிகரித்துள்ளது. பெண் என்பவள் ஒரு இயந்திரம் என்றவாரே நோக்கப்படுகின்றது. அரசியலில் சமத்துவம் சொல்லப்பட்டாலும் நடைமுறை கொள்கை இங்கு முறையாக இல்லை என்பதை உண்மை. தொழில் புரிகின்ற பெண்களை எடுத்துக் கொண்டால் குறிப்பாக சுயதொழில் மேற்கொள்கின்றவர்களால் இந்த நாட்டுக்கு ஒரு வருமானம் கிடைக்கின்றது. எனவே நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் பெண்களுடைய உரிமைகள் மீள சரி செய்யப்பட்டு புதிய அரசியலமைப்பில் கொள்கையாக கொண்டு வரப்பட வேண்டும்.

அரசியல் யாப்பில் 12/1 ஆனது சட்டத்திற்கு முன் அனைவரும் சமன் என்று சொல்லப்பட்டுள்ளது.ஆனால் 12/5 சரத்தின் படி ஒவ்வொரு இனமும், மதமும் எழுதப்படாத சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.எனவே இங்கு முதலாவது மற்றும் ஐந்தாவதற்கிடையில் சிக்கல்கள் உள்ளன.இவை நீக்கப்பட வேண்டும்.ஏனெனில் 12/5 இல் வழக்காற்றுச் சட்டங்கள் இருக்கின்றது.உதாரணமாக தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ,கண்டிய சட்டம் இந்த சட்டங்களில் வெளிப்படையாக பெண்களை ஓரம் கட்டியுள்ளது.இங்கு பாரபட்சம் நிலவுகிறது.தேசவழமை சட்டத்தை எடுத்துக் கொண்டால் காணி உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.ஒரு பெண் திருமணமாகிய பின்னர் தான் சுயமாக சம்பாதித்த அசையா சொத்துக்களை கணவனுடைய எழுத்து மூல ஒப்புதலின்றி நன்கொடையாக விற்பனை செய்ய முடியாது.இதனால் தான் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு சுய தொழிலில் ஈடுபட முடியாதுள்ளது.வங்கிகளில் கடன் கேட்டாலும் காணி பத்திரங்களை ஆதாரமாக கேட்கின்றனர்.அதே போல தான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.இங்கு அனைத்து சட்டத்திலும் பெண்களுக்கான காணிப் பங்கீடு மறுக்கப்பட்டுள்ளது.எனவே இவற்றையெல்லாம் திருத்திய புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைத்து பெண்களினதும் கோரிக்கையாக உள்ளது.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அந்நிய செலாவணி வீதம் அதிகரித்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே இங்கு ஆண்களைப் போன்றே பெண்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு போராடக் கூடியவர்கள், கஷ்டப்படக் கூடியவர்கள். பெண்கள் இந்த நாட்டின் கண்கள் அவர்களுடைய அனைத்து உரிமைகளும் சட்டரீதியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.