(ஆர்.சிவராஜா)

*  உதவுவதாகக் கூறி இறுதிநேரம் கைவிட்ட இந்தியா

* இலங்கை விமானப்படை ஹெலி தரையிறங்க மாலைதீவில் அனுமதி மறுப்பு

* இறுதி நாளில் மிரிஹான வீட்டில் முக்கிய ஆவணங்களை அகற்றிய கோட்டாவின் துணைவியார்

 * கோட்டாபய தோல்வியடைந்த தலைவராக வெளியேறியமைக்கான காரணங்கள்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி வரை எந்த தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை.

ஆனால், ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தையடுத்து ஏற்பட்ட அழுத்தங்களினால் அவருக்கு வேறு வழிகள் இல்லாமல் போயின.

கடந்த 8 ஆம் திகதி இரவும் கோட்டாபய, ஜனாதிபதி மாளிகையிலேயே தங்கியிருந்தார். மறுநாள் 9 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் மக்கள் போராட்டம் பெரிதளவில் இடம்

பெறாதென்று பாதுகாப்புதுறையினர் தெரிவித்திருந்ததால் கோட்டா அது குறித்து பெரிதாக அச்சமின்றி இருந்தார் என்று சொல்லப்பட்டது. வருபவர்களை பயமுறுத்த வானத்தை நோக்கிச் சுடலாம் என்று படையினர் தப்புக்கணக்கு போட்டதை கோட்டாவும் நம்பியிருந்தார். ஆனால், 9 ஆம் திகதி நிலைமை மோசமாகுமென்று அரச தேசிய உளவுத்துறை கோட்டாவை எச்சரித்திருந்தது.

எவ்வாறாயினும் 9 ஆம் திகதி காலை போராட்டக்காரர்களின் கடும் ஆக்கிரமிப்பு காரணமாக அன்று காலை வேளையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோட்டா தனது மனைவியுடன் புறப்படவேண்டியேற்பட்டது.இந்த சந்தர்ப்பத்தில் பெஸிலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் வெளியேறினார். இந்த களேபரத்தில் பெசிலின் அமெரிக்க கடவுச்சீட்டும் காணாமல் போனது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட அந்த இறுதி நிமிடங்களில் முப்படைத் தளபதிகள் சகிதம் ஜனாதிபதி மாளிகையின் பின்வாசல் வழியாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோட்டா தம்பதியினர் அங்கிருந்து விசேட கப்பல் ஒன்றின் மூலம் திருகோணமலை சென்றனர். இவர்களுடன் கடற்படைத்தளபதியும் சென்றிருந்தார்.பின்னர் 11 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு வந்த கோட்டா அங்கு முப்படைத் தளபதிமார் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் அவசர சந்திப்பொன்றை நடத்தினார். மக்களின் எதிர்ப்பு அதிகரிப்பதால் பாதுகாப்புடன் நாட்டிலிருந்து வெளியேறுவது நல்லதென பாதுகாப்புத்துறையினர் கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கினர். 

அதேசமயம் அமெரிக்காவுக்கு செல்வதென நினைத்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவியை கோட்டாபய நாடியபோதும் உடனடி விசாவை வழங்க தூதரகம் சம்மதிக்கவில்லை. கோட்டாவின் துணைவியார் அமெரிக்க விசாவை கொண்டிருந்தாலும், அவர் தனது கணவரை விட்டு தனியே அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. இரத்மலானையில் கோட்டா பாதுகாப்பு கூட்டம் நடத்திய அதேசமயம் அவரின் மனைவி அயோமா, தரைவழியாக மிரிஹானை இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் இரத்மலானை வந்திருந்தார்.

இரத்மலானை விமானப்படை தளத்தில் நடந்த கூட்டம் முடிவடைந்த கையோடு  அங்கிருந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு தரைவழியாக புறப்பட்டார் கோட்டா. மறுபுறம் அவர் திருகோணமலை செல்வதாக காட்டி பாதுகாப்பு யுக்தியாக ஹெலிகொப்டர் ஒன்று இரத்மலானையிலிருந்து திருகோணமலைக்கு புறப்பட்டது. தரைவழியாக கட்டுநாயக்க வந்த கோட்டா தம்பதியினர் அங்கு இரகசிய இடமொன்றில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு படைத்தளபதிகளை தவிர வேறு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெனரல் சவேந்திர சில்வா விமான நிலையத்தில் இறங்கி அந்த தளத்திற்கு சென்று கோட்டாவை சந்தித்து பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளை விளக்கியிருந்தார்.

மீண்டும் 12 ஆம் திகதி கட்டுநாயக்கவில் இருந்து தலவத்துகொட இராணுவ தலைமையகத்திற்கு வந்த கோட்டாஇ அங்கு ரணில்இ சபாநாயகர் மஹிந்த ஆகியோரை சந்தித்து நிலைமை

கள் குறித்து பேசினார். அதேசமயம் வெளிநாடு செல்லும்வரை தனது பதவிநிலையில் தொடரவிரும்புவதாக அங்கு குறிப்பிட்டார் கோட்டா. இராணுவத் தலைமையகத்தில் இருந்தபடி மக்காவுக்கு சென்றிருந்த மாலைதீவு ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்த கோட்டா, மாலைதீவுக்கு வருவதற்கு இடமளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாலைதீவு ஜனாதிபதியும் அதற்கு  விருப்பை வெளியிட்டிருந்தார். இங்கு முக்கிய விடயமொன்றை குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஏற்பாடு நடக்கும் முன்னர்  இந்திய அரசிடமும் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டது. தமிழகத்தின் விமானப்படை தளமொன்றில் கோட்டாபய இறங்கி அங்கிருந்து வெளிநாடு புறப்படுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கோட்டாபய தரப்பின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய இந்தியா இறுதிவரை அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடிப்புச் செய்தது. தமிழகத்தில் தரையிறங்க கோட்டாவுக்கு இடமளித்தால்  பெரும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று கருதி இந்தியா இதற்கு இடமளிக்கவில்லையென தெரிகிறது. இந்தியாவின் இந்த செயற்பட்டால் அதிருப்தியடைந்த கோட்டா, மாலைதீவு ஜனாதிபதியின் உதவியை பெற்று அங்கு சென்று அங்கிருந்து புறப்பட தீர்மானித்தார்.

இராணுவத் தலைமையகத்தில் இரவுணவை முடித்துக்கொண்டு தரைவழியாக மீண்டும் கட்டுநாயக்க சென்ற கோட்டா விசேட விமானப்படை விமானம் மூலம் மாலைதீவு புறப்படத் தயாரானார். உரிய அனுமதிகள் பெற்று  குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அனுமதியை பெற்றாலும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து விமானப்படை விமானம் புறப்படவில்லை. மாலைதீவின் விமான நிலைய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு அதற்குரிய அனுமதியை வழங்கவில்லை. இதனையடுத்து 12 ஆம் திகதி நள்ளிரவு மாலைதீவு ஜனாதிபதியை மீண்டும் தொடர்புகொண்ட கோட்டா நிலைமையினை விளக்கினார். அத்துடன் இதற்காவது உதவியை தருமாறு இந்தியாவிடம் கோரப்பட்டது. இதனையடுத்து இந்தியாவின் ஆலோசனையின் பேரில் மாலைதீவில் தரையிறங்கி பின்னர் சிங்கப்பூர் செல்ல மாலைதீவும் அனுமதித்தது. 13 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானப்படை விமானம்  ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் மாலைதீவு சென்றது. வழமையாக ஒரு மணிநேரமே இந்த பயணத்திற்கு செல்லும் என்ற போதும் இலங்கை விமானப்படை விமானம் வேகமாக செல்லக்கூடிய ஒன்றல்ல என்பதால் அந்தளவு நேரம்  எடுத்துக்கொண்டது.

மாலைதீவு மற்றும் சிங்கப்பூரில் கோட்டாவுக்கு இடமளிக்கக்கூடாதென எதிர்ப்புகள் வலுத்தன. ஆனால், அவர் வெறும் விருந்தினர் மட்டுமே என்று சொல்லப்பட்டது. மாலைதீவில் ஜனா என்ற தொழிலதிபரின் ஹோட்டலில் தங்கிய கோட்டா பின்னர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார் . சிங்கப்பூரிலிருந்து அவர் அபுதாபி செல்ல ஏற்பாடாகியிருந்தது.

எவ்வாறாயினும் இவ்வளவு இழுபறிகளுக்கு  மத்தியில், ஜனாதிபதி பதவியை கோட்டா தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் அர்த்தமில்லையென கோட்டாவின் குடும்பத்தினர் அழுத்தமாக தெரிவித்ததையடுத்து பதவியை துறக்கத் தீர்மானித்தார் கோட்டாபய.

 கோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணம் வேறு யாருமல்ல. அவரேதான்.

பதவியேற்ற முதல்நாளில் தனது செயலாளராக பி.பீ.ஜயசுந்தரவை தனது செயலாளராக நியமிக்க பெசிலின் ஆலோசனைப்படி செயற்பட்ட கோட்டா, இறுதிவரை தன்னை சூழ்ந்து இருந்தவர்களின் ஆலோசனை

களின்படியே இயங்கினார். சுயபுத்தியும் இல்லை, சொந்தபுத்தியும் இல்லை என்பதைப்போல செயற்பட்ட கோட்டாஇ ஒரு கட்டத்தில் தனக்குப் பதவியை அர்ப்பணித்த அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவையே கணக்கில் எடுக்காமல் நடந்துகொண்டார் என்பது பலருக்குத் தெரியாத விடயம். கோட்டாவால் வழங்கப்பட்ட நியமனங்கள் பல தொடர்பில் அவரின் கீழ் பிரதமராக இருந்த மஹிந்தவுக்கே தெரியாது. அப்படிதான் இருந்தது ராஜபக்ஷக்களின் அரசியல். ஆனால், சகோதர பாசத்திற்காக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்

றிக்கொண்டனர். ஆனால் மே 9 ஆம் திகதியுடன் எல்லாம் முடிந்து போயின.

ஒரு கட்டத்திற்கு மேல் கோட்டாவால் அரச நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது என்ற நிலைமை வந்தது. அப்போது பெசில் அடுத்த ஜனாதிபதியாக வர ஆசைப்பட்டார். மேலும் சிலர் கோட்டபாயவுக்கு எதிராக மறைமுகமாக செயற்பட ஆரம்பித்தனர். மிக முக்கிய விடயமொன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு கட்டத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்  ஒருவரை அழைத்த கோட்டா, தனக்கெதிராக செய்யப்படும் வேலைகள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும்  அப்படியான வேலைகளை செய்யக்கூடாதென்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 ''எனக்கெதிராக கோட்டா கோ கம போராட்டம் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. அதற்கு நிதி வசதிகள் செய்தது யார், கோட்டா கோ கம என்று கூகுளில் பெயரை காட்டுவதற்கு ஆலோசனை சொன்னது யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்து அமைதியாக இருக்கிறேன்'' என்று குடும்பத்தின் இளவல் ஒருவரிடம் கோட்டாபய நேரடியாகவே தெரிவித்திருந்தார்.

கோட்டாவுக்கு அரசியல் அனுபவம் இல்லையென்பதற்கு அப்பால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை நிர்வகிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருந்தார் பெசில். மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரை நேரடியாக நினைத்த நேரம் சந்திக்க முடிந்த எம்.பிக்களுக்கு கோட்டாவை அப்படி அணுகமுடியவில்லை. அதனால் சாதாரண பிரச்சினைகளை கூட கோட்டாவுடன் பேசி தீர்க்க முடியாத நிலைமை எம்.பிக்களுக்கு. அவர் மீதான விரக்திக்கு அதுவும் ஒரு காரணம்.

வரி நிவாரணம் வழங்கி தொழிலதிபர்களுக்கு உதவியமை, இரசாயன உரத்தடை, வெளிவிவகார கொள்கைகளில் முறையான ஒழுங்குமுறையின்மை என்பன ராஜபக்ஷக்களின் வீழ்ச்சிக்கு காரணம். தவிர இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவோ, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்கவோ எந்த முயற்சிகளையும் கோட்டாபய அரசு மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அல்லது வேறெந்த தமிழ்த் தரப்புடனும் ஒரு தடவையேனும் பேச்சு நடத்தவில்லை. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சந்தித்து பேசி அவர்களின் கருத்தை உள்வாங்குமாறு கோட்டா உத்தரவிட்டபோதும் அது சாத்தியப்படவில்லை. ஞானசார தேரரை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதேபோல் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைகளை செய்த காரணத்தினால் இறுதியில் பொருளாதார நெருக்

கடிகளுக்கு இஸ்லாமிய நாடுகளின் உதவியைக் கூட கோட்டாவினால் பெறமுடியாமற் போய்விட்டது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தோல்வியடைந்த, அதுவும் இடைநடுவில் பதவியை இராஜினாமா செய்த அரச தலைவராக வெளியேறினார் கோட்டா. தெற்காசியாவில் கடந்த ஒரு வருடத்தில் நாட்டை விட்டு தப்பியோடிய இரண்டாவது தலைவர் கோட்டா. 2021 ஒகஸ்ட்டில் தலிபான் ஆக்கிரமிப்பால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தப்பியோடினார். அதன்பின்னர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கோட்டாபய தப்பியோடினார்.

மஹிந்த ராஜபக்ஷ வளர்த்த  அரசியல் சாம்ராஜ்யத்தை சரித்துச் சென்ற கோட்டாபய நாட்டில் எதிர்காலத்தில் வரும் அரசியல் தலைவர்களுக்கும் செய்தியொன்றையும் விட்டுச் சென்றுள்ளார். மக்களை எந்நாளும் ஏமாற்ற முடியாது என்ற செய்தியே அது. கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்றபோது பாற்சோறு உண்டு கொண்டாடி மகிழ்ந்த சிங்கள மக்கள்,  கோட்டா இராஜினாமா செய்தபின்னரும் பாற்சோறு உண்டு கொண்டாடினர் என்றால் அதனை கர்மவினை என்று கூறாமல் வேறென்ன சொல்வது ?கருத்துரையிடுக

Blogger இயக்குவது.