இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரபல சமூக ஆர்வலருமான ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கருத்துரிமை உட்பட அடிப்படை உரிமைகள்மீதான அடக்குமுறையின் நீட்சி எனக் கருதும் சுதந்திர ஊடக இயக்கம் குறித்த கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பட்டாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் ஹனா இப்ராஹீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஆகஸ்ட் 03 ஆம் திகதி மாலை, கொழும்பில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்க அலுவலகத்தில் வைத்துப் காவல்துறை வாகனத்தில் வந்த பொலிஸ் குழுவினர் அலுவலகத்தைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டமையே கைதுக்கான காரணம் என்பதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி செயற்பாட்டாளரான சமன் ரத்னப்பிரிய இரண்டு நாட்களுக்கு முன்னர் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை இங்கு நகைச்சுவைக்குரிய காரணமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட பெருமளவிலான நபர்களைப் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். மேலும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் விசாரணைக்காகக் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவுக்கு எதிராகவும் நீதிமன்றில் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல தடவைகள் காலிமுகத்திடல் போராட்ட பூமியை அகற்றுமாறும் மற்றும் போராட்டங்களைத் தடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரி அது மறுக்கப்பட்ட போதிலும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்குக் குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கோட்டை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நன்றி : விடியல்