உணவு உற்பத்தியின் அவசியம் தொடர்பாக உலகமே இன்று குரல் கொடுத்து வருகின்றது. உணவுப் பொருட்களின் பற்றாக்குறையும், விலையேற்றமும் இக்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்திலுமே பிரதான பிரச்சினையாக உள்ளன.

உலக நாடுகள் அனைத்தையும் இரு வருட காலமாக கொவிட் தொற்று முற்றாக முடக்க வைத்து இருந்ததனாலும், எதிர்கால பொருளாதாரம் குறித்து நாடுகள் சரியாகத் திட்டமிடாததாலுமே இவ்வாறான விளைவு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் நாளும் பொழுதும் தாறுமாறாக அதிகரித்தபடி செல்கின்றன. விலையுயர்வைத் தாங்க முடியாதவர்களாக மக்கள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

உலக நாடுகளை எடுத்துக் கொண்டோமானால் மக்கள் பெருக்கமானது கட்டுக்கடங்காமல் பெருகி விட்டது. அதற்கேற்ப உணவுப் பொருட்களின் நுகர்வும் அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்றவாறு உலகில் உணவு உற்பத்தியானது அதிகரிக்கவில்லை என்பதுதான் இங்கே ஆபத்துக்குரிய விடயமாக உள்ளது. மக்களின் அதிகரித்த நுகர்வுக்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையாயின் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.

உலக நாடுகளில் தற்போது நிலவுகின்ற பிரதானமான பிரச்சினை இதுவேயாகும். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், மக்கள் எண்ணிக்கைப் பெருக்கத்தை எதிர்கால நெருக்கடி கருதி திட்டமிடுவது குறித்தும் உலகம் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. இவை சம்பந்தமாக மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் உலக நாடுகள் பொருட்படுத்தவில்லை. இந்த அலட்சியமானது எதிர்காலத்தில் பாரிய சிக்கலாக உருவெடுக்கப் போகின்றது என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்தாகும்.

இவ்விடயங்களில் கடைப்பிடிக்கப்படுகின்ற அலட்சியம் காரணமாக தனியொரு நாட்டுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்துக்குமே நெருக்கடி ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கத் தொடங்கி விட்டனரென்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு நாட்டினதும் தலையாய பொறுப்பாகும். மனித வாழ்க்கையின் இருப்புக்கு உணவுதான் அதிமுக்கியமாகும். எனவே உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நாடெங்கும் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டுக்கு அரசியலுக்கு அப்பால் துரிதமான பொருளாதார அபிவிருத்தியே மிக அவசியமாக இருக்கின்றது. இன்றைய வீழ்ச்சியில் இருந்து எமது நாடு எவ்வாறாவது உடனடியாக மீண்டெழ வேண்டும். இல்லையேல் மக்களின் இன்றைய நெருக்கடிகள் மேலும் தீவிரமடைவதற்கான ஆபத்தே தென்படுகின்றது. மக்கள் இதனை விட மேலும் நெருக்கடியைத் தாங்கிக் கொள்வதென்பது இயலாத காரியமாகும்.

இன்று எமது நாட்டுக்குத் தேவையாக உள்ளது வெறுமனே அரசியல் மாத்திரமல்ல. வீழ்ச்சியடைந்து போயுள்ள பொருளாதாரத்தை துரித கதியில் மீளக்கட்டியெழுப்புவதற்கான செயல்திட்டங்களே மிகவும் அவசியமாகவுள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையேற்றம், எரிபொருட்களுக்கான நீண்ட கியூ வரிசை போன்றனவெல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து தாங்கள் நெருக்கடியற்று நிம்மதியாக வாழும் சூழல் உருவாக வேண்டுமென்பதே சாதாரண மக்களின் ஏக்கம் ஆகும்.

உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் அரசினால் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. மனைப் பொருளாதாரம் போன்ற சில திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. வீட்டுத் தோட்டச் செய்கையில் கவனம் செலுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நெற்செய்கையை அதிகரிக்கும் வகையில் இரசாயனப் பசளை இறக்குமதிக்கும் அரசாங்கம் தற்போது ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதேசமயம், எமது அயல்நாடான இந்தியாவும் அசேதன உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு வெறுமனே உணவு நிவாரணத்தை வழங்குவது மாத்திரமன்றி விவசாயத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இந்தியா இவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொள்வதே இன்றைய நிலையில் அவசரத் தேவையாக உள்ளது.

எமது நாட்டின் இன்றைய நெருக்கடியான நிலைமை குறித்த புரிதல் நம் எல்லோருக்கும் தற்போது அவசியம். எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படப் போகின்ற பாரிய சிக்கலாக உணவுப் பற்றாக்குறை இருக்கலாமென்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அந்த எச்சரிக்கை அறிவிப்புகளை அலட்சியம் செய்து விட முடியாது. மக்கள் ஒவ்வொருவரும் சிறிதளவாவது ஏதேனுமொரு பயிர்ச்செய்கையில் ஈடுபடத் தொடங்குவார்களானால் உணவு நெருக்கடியின் தாக்கத்தை ஓரளவேனும் தணிக்க இயலும்.

-முஹம்மட் ஹாசில்- 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.