ஹிஜ்ரி (இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை 11இல்  இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மாபெரும் சிந்தினையாளர் ஒருவராக கருதப்படுகின்றார்கள். நபிகள் நாயகம் ﷺ மற்றும் நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வரையான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம் செலுத்திய ஒருவர் இருப்பாரென்றால், அது அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களாகத்தான் இருக்கும் என நவீன காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆங்கில இஸ்லாமிய அறிஞரான மார்டின் லிங்ஸ் (செய்ஹ் அபூபக்கர் ஸிராஜுதீன்) அவர்கள் குறிப்பிடுகின்றார். இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் முழு உம்மத்தினதும் அன்பை வென்ற ஒருவராக காணப்படுவதோடு, இஸ்லாமிய உலகில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேல் மக்கள் அன்பு வைத்ததுபோல் எந்தவொரு இறைஞானிகள் மீதும் மக்கள் இவ்வாறு அன்பு வைக்கவில்லை. ஏழையோ,பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ என்றில்லாமல் அனைவரும் இமாம் அவர்கள் மீது நேசம் உடையவராக காணப்படுகின்றார்கள் என நவீன காலத்தின் செல்வாக்குள்ள கிழக்கத்தேய ஆய்வாளரும், எழுத்தாளரும்,  பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான ஜெர்மன் நாட்டைச் சேரந்த ஆன்மெரி ஸ்ச்சிமெல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்  கி.பி. 1077இல் அதாவது ஹிஜ்ரி 470இல், பாரசீகத்தின் (இன்றயை ஈரானின்) ஜீலான் நகரில் பிறந்தார்கள். இவர்கள் தந்தை வழியில் இமாம் ஹஸன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊடாகவும், தாய் வழியில் இமாம் ஹுஸைன்  (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஊடாகவும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். தனது 18ஆவது வயதில் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக ஈராக்கின் பக்தாத் நகருக்குச் சென்றார்கள். அப்போது அப்பாஸிய கிலாபத்தின் தலைநகராக பக்தாத் நகரம் விளங்கியது. அக்காலப் பகுதியில் பக்தாதின் புகழ்பெற்ற மத்ரஸாவாக காணப்பட்ட ஜாமிய்யா நிழாமிய்யா மத்ரஸாவில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது கல்வியைத் தொடர்ந்தார்கள். ஜமிய்யா நிழாமிய்யாவில் ஏழு வருடங்கள் கற்றார்கள். பின்னர், தன்னை ஆன்மீக ரீதியாக பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்கள். 25 வருடங்களாக தன்னை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்துவதில் ஈடுபட்டார்கள். 

தனது 51ஆவது வயதில் மக்கள் மத்தியில்  பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி ஆறாவது நுாற்றாண்டில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. மக்கள் சொகுசான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். ஊழல் நிறைந்த , அநீதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆட்சியாளர் முதல் பொது மகன் வரை அனைவரும் மார்க்கத்தில் இருந்து துாரமாகக் காணப்பட்டனர். அவ்வாறான ஒரு சூழலிலேயே இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ,இவற்றிற்கு எதிராக எழுந்துநின்று, மக்களுக்குள்ள தார்மீகப் பொறுப்புகளைப் பற்றிப் பேசினார்கள். மக்கள் செய்யும் குறைகளை சுட்டிக்காட்டிப் பேசிய செய்ஹ் அவர்கள், மக்களை இஸ்லாத்தின் பால் மீளுமாறு அழைப்புவிடுத்தார்கள். காலப்போக்கில் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உரையை கேட்கவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே, இமாம் அவர்கள் பிரசங்கம் செய்யக்கூடிய இடம் விரிவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளக்கூடியவாறு புணரமைக்கப்பட்டது. 

இமாம் அவர்களின் உரையைக் கேட்க ஏறத்தாள அறுபது முதல் எழுபதாயிரம் வரையான மக்கள் ஒன்றுதிரண்டனர் என சில வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், இமாம் அவர்களின் உரையை கேட்கவருபவர்களுக்கான வதிவிட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக வதிவிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இமாம் அவர்களின் மாணவர்களாக காணப்பட்டனர். எனவே, இமாம் அவர்களுக்கு 'முஹியித்தீன் ' அதாவது இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச்செய்தவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.  இமாம் அவர்களின் ஆயிரக்கணக்கான மாணவர்களுள் சூபிகள், புகஹாக்கள், உலமாக்கள், அமைச்சர்கள், கலீபா மற்றும் பொதுமக்கள் போன்றோர் இடம்பெற்றிருந்தனர். 

தனது ஆசிரியரான அஷ்செய்க் யூசுப் அல்-ஹம்தானி அவர்களின் மத்ரஸாவை இமாம் அவர்கள் நடாத்தி வந்தார்கள். இமாம்  அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் ஒரு வாரத்தில் மூன்று தடவை  விரிவுரை நடத்துபவராக இருந்தார்கள். இரண்டு தடவை அவர்களது மத்ரஸாவிலும், அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்திலும் மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்திலும் மற்றும் அவர்களது தங்குமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்திலும் விரிவுரை நடத்துபவராக இருந்தார்கள். அவர்களது விரிவுரைக்கு வழக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள்(உலமாக்கள்), சட்ட நிபுணர்கள் (புகஹாக்கள்) செய்குமார்கள் மற்றும் மேலும் பலர் வருகை தருபவர்களாக இருந்தார்கள்.  

இமாம் அவர்கள் 40 வருட காலமாக பொதுமக்களுக்கு விரிவுரைகளை நடத்தினார்கள். அவர்கள் ஹிஜ்ரி 521 முதல்  விரிவுரைகள் வழங்குவதை ஆரம்பித்து, ஹிஜ்ரி 561 இல் விரிவுரைகள் வழங்குவதை நிறைவு செய்தார்கள். அதே காலப்பகுதியில், அவர்கள் தனது மத்ரஸாவில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பத்வாக்களையும் வழங்கினார்கள். இதனை 33 வருட காலம் தொடர்ந்தார்கள். அதாவது, ஹிஜ்ரி 528 இல் ஆரம்பித்து, ஹிஜ்ரி  561 இல் நிறைவு செய்தார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில், அவர்கள் ஷாபி, ஹனபி, ஹம்பலி மற்றும் மாலிக்கி சிந்தனைப் பள்ளிகளினுடைய அறிஞர்கள் மத்தியில் மிகச்சிறந்த நிலையில் உள்ள அறிஞராக திகழ்ந்தார்கள். மேலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாபி மற்றும் ஹம்பலி சிந்தனை  பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த அறிஞர்கள் இடையில் உயர்ந்த ஒருவராகக் காணப்பட்டார்கள் என இமாம் நவவி அவர்கள் குறிப்பிடுகின்றார். 

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷரீஅத்தின் வெளிவாரியான 13 கலைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தோடு, அக்காலப்பகுதியில் இருந்த மாணவர்களுக்கு,இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் போன்று வேறு எந்த ஒரு அறிஞரையும் பார்க்கக்கிடைக்கவில்லை. மேலும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய சட்டவியல் போன்ற கலைகளிலும், பத்வாக்கள் வழங்குவதிலும் மற்றும் ஏனைய கலைகளிலும் அறிவுக்கடலாக இருந்தார்கள் என இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான செய்க் முவப்பாக் அல்தீன் இப்ன் குதாமா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

இமாம் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிறந்த முன்னுதாரனமாகவும், அனைத்து ஆத்மஞானிகளுக்கு வழிகாட்டியாகவும், இஸ்லாத்திற்கு புத்துயிரூட்டிய பெரும் அறிஞராகவும் திகழ்ந்ததாக புகழ்பெற்ற ஹதீஸ்துறை அறிஞர் இமாம் தஹபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பரந்த அளவில் நன்மதிப்பை பெற்ற அறிஞராகவும், அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் ஏனைய செய்ஹ்மார்களுக்கு எல்லாம் சுல்தானாகவும், ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும் காணப்பட்டதோடு, அவர்கள் மூலம் பலர் தமது பாவச்செயல்களை விட்டும் மீண்டு நல்வழியில் வாழ்ந்தனர் என புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் இமாம் இப்ன் ரஜப் அல்-ஹம்பலி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் ஏவல் விலக்கல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும், அவ்வாறே ஏனையவர்களுக்கு  ஏவுபவர்களாகவும் இருந்தார்கள் என இப்னு தைமியா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் நான்கு திருமணங்கள் செய்தார்கள். அதன்மூலம் அவர்களுக்கு 27 மகன்களும், 22 மகள்களும் கிடைக்கப்பெற்றது. இமாம் அவர்கள் வருடத்தில் ஐந்து நாட்களைத் தவிர, ஏனைய நாட்கள் முழுவதும் நோன்பு நோற்பவராக இருந்தார்கள். அவர்கள் பகல் காலங்களில் பிரசங்கங்கள் நிகழ்த்துவதையும், பத்வாக்கள் வழங்குவதையும் வழக்கபடுத்திக் கொண்டிருந்தார்கள். இரவுவேளைகளில் இறைவனை நின்று வணங்குபவர்களாக இருந்தார்கள். இதுவே அவருடைய வழமையான செயற்பாடாக அமைந்திருந்தது. இமாம் அவர்கள் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் உணவு உட்கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

இமாம் அவர்கள் உணவு உட்கொள்ளும் போது, அவர்களுடன் ஆதாரவற்றோரும், பிச்சைக்காரர்களும் உடன் இருந்தோடு, இமாம் அவர்கள் சாப்பிடும் அதே உணவு வகையே அவர்களுக்கும் பரிமாறப்பட்டது. இவ்வாறு இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது வாழ்வை இஸ்லாத்திற்கு அர்ப்பணித்ததோடு, மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 91ஆவது வயதில் வபாத்தானார்கள். இமாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பை (காதிரிய்யா தரீக்கா)  இன்றுவரையும் உலகில் பல இலட்சக்கணக்கான மக்கள் பின்பற்றிவருகின்றனர். 

பைத்துல் முக்கத்தஸ்ஸை மீட்கப் போராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள், இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்  அவர்களின் மகனான இமாம் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவராக காணப்பட்டார்கள். சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் படையில் இணைந்திருந்த 50 சதவீதமானோர் இமாம் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்களாகக் காணப்பட்டனர். 

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பின் (தரீக்கா) பாசறையில் பயிற்றுவிக்கப்ட்டவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாத்தின் துாதை கொண்டு செல்வதிலும், இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதிலும், மேற்கத்தேய கலாநித்துவத்திற்கு எதிராக போராடுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். 

இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனரான அஷ்செய்ஹ் அப்துல் ரஸ்ஸாக் அல்-ஜீலானி அவர்களின் பேரரான அஷ்செய்ஹ் தியாஅத்தீன் அப்துல் ரஸ்ஸாக்  அல்- காதிரி அவர்கள் கி.பி. 13ஆம் நுாற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் சீனாவின் மத்திய பகுதிக்கு புனித தீனுல் இஸ்லாத்தின் துாதை எடுத்துச்சென்றார்கள். 

தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான அலவிய்யா பெரும் பங்காற்றியுள்ளது. கி.பி. 13ஆம் நுாற்றாண்டில் யெமன் ஹளரமெத் பிரதேசத்தில் இருந்து சென்ற அலவிய்யா வழியமைப்பைச் சேரந்த செய்குமார்கள் இப்பிராந்தியத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளில் இஸ்லாத்தை பரப்புவதில் பங்காற்றியவர்களாக காதிரிய்யா வழியமைப்பின் அலவிய்யா பிரிவைச்சேர்ந்த ஒன்பது ஆத்மஞானிகள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த ஒன்பது ஆத்மஞானிகளும், வலி சொங்கோ என்று அழைக்கப்படுகின்றனர். 

இந்தேனேசியாவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டங்களை காதிரிய்யா வழியமைப்பின் அறிஞர்கள் முன்னின்று வழிநடத்தினார்கள்.19ஆம் நூற்றாண்டில் டச்சு காலனித்துவத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவான உலமாக்களும், சூபிகளும், விவசாயிகளும் பங்குகொண்டனர். இப்போராட்டத்தில் பெருமளவான உலமாக்களும், சூபிகளும் கலந்துகொண்டதால் டச்சுக்காரர்கள் இப்போரை பத்ரி யுத்தம் (Padri War) என அழைத்தனர். ஏனெனில் பத்ரி என்ற டச்சுச்சொல் 'மதகுரு' என்று பொருள்படுகின்றது. கி.பி. 1888ஆம் ஆண்டு டச்சுக்காரர்களுக்கு எதிராக நடத்திய டிஜிலெஜன் எழுச்சிப் போராட்டத்தில் (Tigilegon Rsings) காதரிய்யா தரீக்கா முக்கிய பங்கை வகித்தது. இந்த போருக்கான ஒழுங்கமைப்பு முறைக்கான  கட்டுக்கோப்பை காதிரிய்யா தரீக்காவே வழங்கியது.

அல்ஜீரியாவில் பிரான்ஸ் கலாநித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அமீர் அப்துல் காதிர் அல்-ஜஸாஇரி அவர்கள் காதிரிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர். இவர்கள்,  இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காதிரிய்யா தரீக்காவின் மேற்கு அல்ஜீரியாவுக்கான செய்ஹ் ஆக செயற்பட்டார்கள்.

அஷ்ஷெய்ஹ் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் றஹ்மதுல்லாஹ் அவர்கள் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.சிரியாவைச் சேர்ந்த இவர் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்  அன்னவர்களின் வழியமைப்பான காதிரிய்யா தரீக்காவின் சிரியாவின் جبلة‎ நகரின் கலீபாவாக இருந்தார்கள். பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி விடுதலைப் போராட்டங்களை நடத்தினார். இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடிய முக்கிய தலைவராக இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் அல் காதிரி அவர்கள் கருதப்படுகிறார்கள். 

16ஆம் நுாற்றாண்டில் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை மற்றும் தென் இந்தியா என்பன வந்ததன் பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பாதிக்கப்பட்டது. 

அக்காலப் பகுதியில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் தீனுல் இஸ்லாத்தை பாதுகாத்த முக்கியமான ஒருவராக நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறியப்படுகின்றார்கள். தாய் வழியிலும், தந்தை வழியிலும் இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்த இவர்கள், காதிரிய்யா வழியமைப்பின் செய்காக காணப்பட்டார்கள். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கு அவர்களது மாணவர்களை இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளுக்கு நியமித்து தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 

நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் மாயதுன்னை மன்னனின் அழைப்பை ஏற்று, போர்த்துக்கேயருக்கு எதிராக போராடுவதற்கு பல தடவைகள் இலங்கைக்கு வந்தார்கள். போர்த்துக்கேயருக்கு எதிரான கடற்போர்களில் போர்த்துக்கேயரின் பல கப்பல்களை குஞ்சாலி மரிக்காரின் படையினர் அழித்தது. ஒருமுறை புத்தளம் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் நடைபெற்ற போரில் போர்த்துக்கேயரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் சிலாபம் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள். 

நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 404 சீடர்களில் ஒருவரான காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்ஹ் ஸதக் இப்ராஹீம்  மரிக்கார் அவர்கள் குஞ்சாலி மரிக்காரினது  படையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்டதோடு, போர்த்துக்கேயருக்கு எதிராக இந்தியாவின் தென்கடலில் நடந்த யுத்தமொன்றில் ‘மெனுவல் டீ சூசா’ என்ற போர்த்துக்கேய தளபதியின் கப்பலை மூழ்கடித்தார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்ட மகான் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மக்பரா தமிழ்நாட்டின் நாகூரில் அமைந்துள்ளது.

17ஆம் நுாற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த இஸ்லாமிய அறிஞராக அஷ்செய்க் ஸகதுல்லாஹ் காஹிரி றஹிமஹுல்லாஹ் அவர்கள் அறியப்படுகின்றார்கள்.  போர்த்துக்கேய காலநித்துவவாதிகள் கீழ் தென்னிந்தியா மற்றும் இலங்கை வந்ததன் பின்னர், இந்தியத் துணைக்கண்ட பிராந்தியத்தில் புனித தீனுல் இஸ்லாத்தை பாதுகாத்த அஷ்செய்க் ஸகதுல்லாஹ் காஹிரி றஹிமஹுல்லாஹ் அவர்கள், நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீடரும், கடற்படை தளபதியுமான செய்ஹ் இப்ராஹீம் ஸதக் மரிக்கார் அவர்களின் பேரரான செய்ஹ் சுலைமான் வலீயுல்லாஹ் அவர்களின் மகனாவார்.  காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக இருந்தார்கள். இவர்களும், இவர்களது நான்கு சகோதரர்களும் போர்த்துக்கேயரை தொடர்ந்துவந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புனித தீனுல் இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக பெரும் பங்காற்றினார்கள்.  

இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியிலும் தனது பணிகளை மேற்கொண்டார்கள்.மக்கா, மதீனா நகரங்களிலும் சட்டகல்வியை அவர்கள் போதித்தார்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஷாபிஈ சட்டவாக்க நிபுணரும், முஹத்திஸூமான இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி அவர்களின் மாணவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்களிடம் ஷாபிஈ சட்டக்கல்வியைப் கற்றுக்கொண்டார்கள். 

அக்காலப்பகுதியில் உஸ்மானிய கிலாபத்தின் கீழ் மக்கா மதீனாவின் நிர்வாகம் இருந்தது. இரண்டு நகரங்களிலும் அதிகளவிலானோர்  புகைப்பதை கண்ணுற்ற இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள்,  ஹரம்களின் எல்லைக்குள் புகைப்பது ஹராம் என்ற பத்வாவை வழங்கினார்கள். பின்னர் அன்றை உஸ்மானிய கிலாபத்தின் கலீபா சுல்தான் 4ம் முராத் (முராத் ராபிஃ) அவர்களை சந்தித்து புகைப்பததன் விளைவுகள் பற்றி எடுத்துக்கூறினார். பின்னர் உஸ்மானிய கிலாபத்தின் கீழ் உள்ள நாடுகளில் புகையிலை உற்பத்தியையும், அதன் பாவனையையும் சுல்தான் 4ம் முராத் அவர்கள்  தடைசெய்தார்கள். 

இலங்கை முஸ்லிம்களின் ஆத்மீக மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவராக செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் அல்-மக்தூமி ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் விளங்குகின்றார்கள்.காதிரிய்யா தரீக்காவின் உப பிரிவான அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக இருந்தார்கள். இவர்கள் இஸ்லாமிய பிரச்சார பணிக்காக தனது சொந்த ஊரான காலியில் இருந்து ஹம்பந்தோட்டை, திருகோணமலை, கண்டி, கணேதன்ன, மக்கொன மற்றும் தர்கா நகர் போன்ற பல இடங்களுக்கு சென்றார்கள். புகழ்பெற்ற சோனக வைத்தியராகவும் இருந்தார்கள். இவர்களால் எழுதப்பட்ட வைத்திய நூல்கள் இன்றும் அவர்களது குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

19ஆம் நுாற்றாண்டு என்பது இலங்கையில் சமய, கல்வி மற்றும் சமூக ரீதியான மறுமலர்ச்சிக்குரிய காலம் என்று அடையாளப்படுத்த முடியும். 19ஆம் நுாற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீகம், கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச்செய்தவர்களில் காதிரிய்யா வழியமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் சேவைகள் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர், இலங்கையில் காணப்பட்ட  ஏறக்குறைய அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்களும், இஸ்லாமிய நினைவுச் சின்னங்களும் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சியின் போது இலங்கைக்கு வந்த இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களாலேயே இலங்கையில் ஏறத்தாள 350 பள்ளிவாசல்களும், தக்கியாக்களும் கட்டப்பட்டது. இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான அரூஸிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக செயற்பட்டார்கள். 

உலகில் தமிழ் மொழியில் (அரபுத் தமிழில்) வெளியிடப்பட்ட முதலாவது தப்ஸீர்,செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் எழுதப்பட்டதாகும். "பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி தப்ஸீரில் குர்ஆன்" என்ற பெயரில் இவ் அல்குர்ஆன் விளக்கவுரை கி.பி. 1874இல் (ஹிஜ்ரி 1291) வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் அச்சுத்துறை வரலாற்றில் முதலாவது அச்சில் வெளியிடப்பட்ட நுாலாக "மீதான் மாலை" விளங்குகின்றது. மீதான் மாலை நுால், கி.பி. 1868இல் (ஹிஜ்ரி 1285) முதன்முறையாக வெளியிடப்பட்டது. செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் பிரிவான நபவிய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக செயற்பட்டார்கள். இவர்கள் யெமன் ஹளரமௌத்தில் இருந்து இலங்கைக்கு சன்மார்க்கப்பணிக்காக வந்த அஸ்ஸைய்யித் அஹமத் இப்னு முபாரக் மௌலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர் ஆவார்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறையில் மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்), அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி றஹிமஹுல்லாஹ் (பாதிப் மெளாலானா) அவர்களின் ஆன்மீக மாணவர்கள் ஆவர். அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் யமன் நாட்டைச் சேர்ந்தவர். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்திசெய்த இவர்கள் காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இருந்தார்கள்.இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று சன்மார்க்கப் பணிகளில் ஈடுபட்டார்கள்.இக்காலப் பகுதியிலேயே அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோரை சந்தித்தார்கள். 

இலங்கையில் முதலாவது முஸ்லிம் பாடசாலையாகக் கருதப்படும் கொழும்பு ஸாஹிராக் கல்லுாரியை அமைப்பதற்கு அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோருக்கு அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இலங்கையின் பல பாகங்களில் பாடசாலைகளை அமைப்பதற்கு, இவர்கள் இருவருக்கும் பாதிப் மெளலானா அவர்கள் துணையாக இருந்தார்கள். தனது ஆன்மீக வழிகாட்டியான அஷ்செய்ஹ் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி அறிஞர் சித்திலெப்பை தனது "அஸ்றாறுல் ஆழம்" என்ற நுாலில் குறிப்பிடுகின்றார்கள். அக்காலப்பகுதியில் பெரும் செல்வாக்குள்ள ஒருவராக வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் இருந்தார்கள். இலங்கையின் தேசிய அருங்காட்சியகம் (Colombo National Museum ) உட்பட பல பிரபல்யமான கட்டங்களை ஆங்கிலேய கட்டடக் கலையமைப்புடன் நிர்மாணித்த பெருமை வாப்பிச்சி மரிக்கார் அவர்களைச் சாரும். 

இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய மற்றுமோர் ஆளுமையாக கசாவத்தை ஆலிம் புலவர்  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இவர்கள் காயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலீ  (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவராக இருந்தார்கள். காதிரிய்யா வழியமைப்பின் கலீபாக்களில் ஒருவராக செயற்பட்ட இவர்கள்,  இலங்கையின் மத்திய மாகணத்தில் இஸ்லாமியமறுமலர்ச்சியை ஏற்படுவத்துவதில் பெரும்பங்காற்றினார்கள். இலங்கையில் அரபு மத்ரஸாக்கள் குறைவாகக் காணப்பட்ட காலப்பகுதியில் கசாவத்தையில் உள்ள தனது வீட்டை குர்ஆன் மத்ரஸாவாக்கி அங்கு மாணவர்களுக்கு ஓதிக்கொடுத்தார்கள். இவர்கள் கசாவத்தையில் நடாத்திய அரபு மத்ரஸாவில் அஷ்செய்கு ஸைன் மெளலானா மற்றும் அறிஞர் சித்திலெப்பை போன்றோர் கல்வி கற்றார்கள். 1892ஆம் ஆண்டு கல்ஹின்னையில் ஒரு அரபு மத்ரஸா உருவாவதற்கு காரணமாக இருந்தார்கள். 

அறிஞர் சித்திலெப்பை அவர்கள் கசாவத்தை ஆலிம் புலவர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி சொல்லும் போது , " கசாவத்தை முஹம்மத் லெப்பே ஆலிம் அவர்கள் லாஹிருடைய இல்மில் மிகவும் தேர்ச்சியுடையவர். இலங்கையில் எந்தக் கோட்டுத் தலங்களிலும் மார்க்க வழக்குகள் உண்டானால் அவர்களின் பத்வாவையே ஏற்றுக் கொண்டார்கள்." என்று குறிப்பிடுகின்றார். கசாவத்தை ஆலிம் புலவர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா நகருக்கு சென்றிருந்த போது அவர்களது கவி ஆற்றலையும், மார்க்க ஞானத்தையும் கண்டு வியந்த அங்கிருந்த அறிஞர் பெருமக்கள் அவர்களைப் போற்றி  "செய்குல் உலமா" என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள். 

காதிரிய்யா வழியமைப்பின் பிரிவான  அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த செய்குமார்கள் கேரளாவிலும், இலங்கையிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்தார்கள். யெமனிலிருந்து கேரளாவிற்கு கி.பி.1755 செய்யித் ஜிப்ரி மௌலானா அவர்கள் வந்தார்கள். கேரளாவில் மக்களிடையே தீனுல் இஸ்லாத்தை கொண்டு சென்றார்கள். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த செய்யித் பத்ழ் மௌலானா அவர்கள் கேராளவில் பிரித்தானியக் கலானித்துவத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டார்கள். செய்யித் ஜிப்ரி மௌலானா அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவரான செய்யித் அஹமத் ஜிப்ரி மௌலானா அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்கைக்கு வந்து சன்மார்க்கப் பணியில்ஈடுபட்டார்கள். இலங்கையின் பிரபல கொடை வள்ளலாக திகழ்ந்த என்.டீ.எச். அப்துல் கபூர் அவர்கள், செய்யித் அஹமத் ஜிப்ரி மௌலானா அவர்களின் முரீதாவார்.

ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இருபதாம் நுாற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கையில் வாழந்த தலைசிறந்த மார்க்க அறிஞராக கருதப்படுகின்றார். இவர்கள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்கு பங்களித்தவர்களில் மிக முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்றார்கள். தாய் வழியிலும், தந்தை வழியிலும் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்த இவர்கள் காதிரிய்யா தரீக்காவின் உப பிரிவான 'ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின்' செய்ஹாக இருந்தார்கள். அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின் தலைவராகவும், அகில இலங்கை உலமா போர்ட் தலைவராகவும், முன்னால் சிலோன் அரசாங்க இலாகாவின் அறபுப் பரீட்சைப் பிரிவின் தலைவராகவும், அகில வெலிகமாம் முஸ்லிம் லீக் தலைவராகவும் ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடன் இணைந்து அறபு அறிவின் விருத்திற்கும், அறபுக் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டத்தை அமைப்பதற்கும் பெரும் பங்காற்றினார்கள். 

19ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுவர்களாக காணப்பட்டார்கள் என கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu" என்ற ஆய்வுநுாலில் குறிப்பிடுகின்றார்கள்.

இலங்கையில் பல இடங்களிலும் காணப்படும் முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இதற்கு ஆதாரமாக உள்ளதுடன், இன்றளவும் இலங்கையில் பல பகுதிகளில் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள் காணப்படுவதோடு நுாற்றுக்கணக்கான தைக்காக்கள் சிறப்பான முறையில் இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல்வேறு இடங்களில் காணப்படும் முஹியித்தீன் பள்ளிவாசல்களுக்கு அப்பெயர் வழங்கப்படுவதற்கு, இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் செல்வாக்கே காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றல்கள், காதிரிய்யா வழியமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்றும் உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்துவருகின்றனர்.இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களை போன்ற மாபெரும் சீர்த்திருத்தவாதியை காண்பது அரிது. நேர்மையும், உண்மையும் நிறைந்த தலைவரின் வழிகாட்டல் 21ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தத்தில் மகத்தான பங்களிப்பை செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் அல்-காதிரி (Ifham Nawas Al-Qadiri)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.