முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி 'மீண்டும் எழுவோம்' கூட்டத்தை டிசம்பர் மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தை நடாத்த இடமளிக்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடுவோம். இனி வரும் காலங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தால் சட்டமூலத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பேன். 20வது திருத்தத்தை இரத்து செய்து, 22வது திருத்தத்தை உருவாக்குவது காலத்தில் கட்டாயமாகும்.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் பங்குப்பற்ற அரசியலமைப்பின் 22வது திருத்தத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளதால், 22வது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் தீர்மானம் அல்ல.

ஐக்கிய தேசிய கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் வேறுபாடுகள் காணப்படுகிறது. நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போது அரசியல் கொள்கைக்கு முன்னுரிமை வழங்க முடியாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பேச்சளவில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு இரகசியமான முறையில் அரசியல் சூழ்ச்சி செய்தால் அது முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவோம். எந்த கட்சியாலும் இனி தனித்து போட்டியிட முடியாது, ஆகவே ஒரு அரசியல் கட்சி பிறிதொரு கட்சியுடன் நிச்சயம் கூட்டணி அமைக்க வேண்டும்.

மீண்டும் எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பொதுஜன பெரமுன நடத்தும் கூட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள் கடந்த மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. அடிமட்டத்தில் உள்ள விடயங்களை திருத்திக் கொள்ளாமல்  கட்சி தலைவரை மேடைக்கு ஏற்றுவது பொருத்தமற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் மாதம் கம்பஹா மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை நடத்த இடமளிக்க முடியாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.