இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர், உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் தொழிலுக்கான இடம்பெயர்வு காரணமாக அதிகமான பெற்றோர்கள் அவர்களை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க முற்படுகின்றனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை உள்ளது. இது 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் சிறுவர்கள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம், வருமான பாதுகாப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (உணவு, எரிபொருள், உரங்கள் மற்றும் மருந்துகள்) கிடைப்பது அரிதாக இருப்பதால், குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முழுவதும், தொடர்ச்சியான மற்றும் அடிக்கடி ஏற்படும் இயற்கை ஆபத்துகள் விவசாயத் துறையையும் தொடர்ந்து பாதித்து, குறைந்த விளைச்சலுக்கு வழிவகுத்துள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது உணவு உற்பத்தியில் 40 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.

எனவே, 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரை உணவுப் பற்றாக்குறை நிலைமை மேலும் மோசமடையக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமைகளை சமாளிப்பதற்கான உத்தியாக, 5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே தமது உணவு வேளைகளை குறைத்து வந்தாலும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்துடன் எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று யுனிசெஃப் கூறுகிறது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.