⏩ அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்...

⏩ திட்ட மதிப்பு 25 பில்லியன் ரூபாய்...

⏩ நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பம்...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நடுத்தர வர்க்கத்தினருக்காக அடுத்த மூன்று வருடங்களில் 25 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

866 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டம் வெலிசர, நிட்டம்புவ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, அதுருகிரிய மற்றும் கடுவெல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீட்டுத்திட்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்களில் நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

நிட்டம்புவ வீடமைப்புத் திட்டமானது 100 மூன்று அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடுகள் மற்றும் 30 இரண்டு அறைகள் கொண்ட வீடுகளைக் கொண்டுள்ளது. மேலும் வெலிசர வீடமைப்புத் திட்டம் 408 வீடுகளைக் கொண்டுள்ளது. இது 204 இரண்டு அறை வீடுகளையும் 204 மூன்று அறை வீடுகளையும் கொண்டுள்ளது.

ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள வீட்டுத் தொகுதியில் 160 வீடுகளும், அதில் 84 இரண்டு அறை வீடுகளும் 72 மூன்று அறை வீடுகளும் 4 சொகுசு வீடுகளும் உள்ளடங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அத்துருகிரிய வீடமைப்புத் தொகுதியானது 60 வீட்டுத் தொகுதிகளைக் கொண்டதுடன், இந்த வீட்டுத் தொகுதிகள் இரண்டு அறைகளைக் கொண்டவை. கடுவெல வீடமைப்புத் திட்டமானது 108 வீடுகளைக் கொண்டதுடன் இரண்டு அறைகளையும் கொண்டுள்ளது.

மூன்று வீடமைப்புத் திட்டங்களும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ வீடமைப்புத் திட்டம் கிராம அமைப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் விசேட திட்டமாகும். நாட்டின் அபிவிருத்திக்காக பங்களிப்புச் செய்த அரச மற்றும் தனியார் துறை பிரஜைகளுக்கு இது ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் வீடற்ற நகர்ப்புற குறைந்த வருமானம் உள்ள மக்களுக்காக 2009 ஆம் ஆண்டு முதல் 1713 வீடுகளை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.

மானியத்துடன் கூடிய நீண்ட தவணை முறையின் கீழ் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.