2030 க்குள் நைட்ரஜன் மாசுபாட்டை பாதியாகக் குறைக்க முன்வருமாறு சுற்றாடல் அமைச்சர் அழைப்பு

"சுற்றுச்சூழல் அமைச்சு, நிலைபேறான நைட்ரஜன் முகாமைத்துவத்தின் (SNM) தேசிய மையப் புள்ளியாக, இலங்கையில் நைட்ரஜன் கழிவுகளை பாதியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க கடமைப்பட்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இருப்பினும், நிலைபேறான நைட்ரஜன் முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொடர்புடைய பிற முகவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த இலக்கை எங்களால் அடைய முடியாது. இந்த முயற்சியில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் போன்ற பிற பங்குதாரர்களிடமிருந்தும் உதவி கோர விரும்புகிறோம். 

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நைதரசன் கழிவுகளை பாதியாகக் குறைக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என இன்று (22) நடைபெற்ற நிலைபேறான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான முதலாவது தேசிய கருத்தரங்கில் சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சும் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கு தலவத்துகொட கிராண்ட் மொனார்ச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நைதரசன் கழிவுகள் மற்றும் முகாமை தொடர்பான கொள்கைரீதியான உரையாடலொன்றை முன்னெடுப்பதற்கும், நிலைபேறான நைதரசன் முகாமைத்துவத்துக்கான தேசிய செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான நுண்ணறிவுகளை வழங்குவதற்கும், சுற்றுச்சூழல் அமைச்சும் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைந்து நிலைபேறான நைதரசன் முகாமைத்துவம் குறித்த இந்த முதலாவது தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. 

கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், இலங்கையில் நைதரசன் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கடல்கடந்த தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதற்கும், இலங்கையில் நைதரசன் கழிவுகளை பாதியாகக் குறைப்பதற்கான சாலை வரைபடத்தை உருவாக்குவதற்கான அவர்களின் நுண்ணறிவுகளை வழங்குவதற்கும் இந்த கருத்தரங்கு ஒரு தளமாக அமையும் எனவும் கௌரவ அமைச்சர் மேலும் கூறினார்.

நைதரசன் மாசுபாடு இந்த நூற்றாண்டின் முக்கிய உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும். விவசாயம், போக்குவரத்து, தொழில் மற்றும் எரிசக்தி துறைகள் உட்பட்ட பல்வேறுதுறைகளிலும் வளர்ந்து வரும் மானுடவியல் தேவைகள் காரணமாக நைதரசன் மாசுபாடும் அதனுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளும் அதிகரித்துள்ளன. நமது உற்பத்திப் பொறிமுறைகளால் காற்று, நீர், மண் மற்றும் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படும் நைதரசன் கழிவுகளால் ஏற்படும் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தீவிரமான பிரச்சினைகளாக உருவாகி வருகின்றன. 

நைரோபியில் நடந்த ஐந்தாவது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையில் (UNEA5), உலகெங்கிலும் உள்ள ஐநா உறுப்பு நாடுகள் 2030 மற்றும் அதற்குப் பிறகான உலகளாவிய நைதரசன் சவாலை சமாளிக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டன.
பிரேசில், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் உகண்டா ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் பூமியில் நிலையான நைதரசன் பயன்பாட்டிற்கான காரணத்தை முன்னிறுத்தி 'நிலைபேறான நைதரசன் முகாமை குறித்த தீர்மானம்' இலங்கையால் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் மார்ச் 2022 அன்று ஐநா உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2030 மற்றும் அதற்கு அப்பால் நிலைபேறான நைதரசன் நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளவில் நைதரசன் கழிவுகளை கணிசமாகக் குறைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தினால் 5.2 தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்த இலக்குகளை நோக்கி அடுத்த எட்டுக்களை வைக்க உதவுவதாக அமைகிறது. அதற்கு முன்னதாக, 2019 அக்டோபரில், இலங்கையின் தீவிர ஈடுபாட்டுடன், ஐ.நா. உறுப்பு நாடுகள் நைதரசன் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான பாதை வரைபடத்தை அங்கீகரித்ததோடு அனைத்து மூலங்களிலிருந்தும் 'நைதரசன் கழிவுகளை பாதியாக' குறைக்கும் நோக்கில் கொழும்பு பிரகடனத்தையும் ஏற்றுக்கொண்டன. இந்த முயற்சியால் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கின் முதல்நாளில் கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாஹேவா, தெற்காசிய சுற்றாடல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SACEP) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மசுமர் ரஹ்மான் மற்றும் UKRI GCRF தெற்காசிய நைதரசன் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்க் சட்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.