அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுமார் 300 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விசேட கூட்டத்தில் ஆராய்வு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0




அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்தாய்வுக் கூட்டம், நேற்றைய தினம் (20) அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


​பிரதேச செயலாளர் மற்றும் திட்டங்களுக்குப் பொறுப்பான அனைத்து அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, வெவ்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் தற்போது அத்தனகல்ல தொகுதி முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் சுமார் 300 அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலாக, வரவிருக்கும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நிட்டம்புவ, வேயாங்கொடை மற்றும் அத்தனகல்ல ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள வெசாக் வலயங்கள் குறித்து இங்கு தீர்க்கமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த வெசாக் வலயங்களைப் பார்வையிட வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கான குடிநீர் வசதிகள், சுகாதார மற்றும் மலசலகூட வசதிகள், மின்துண்டிப்பு இல்லாத மின்சார விநியோகம் மற்றும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளால் திட்டங்கள் வகுக்கப்பட்டன.


இம்முறை அத்தனகல்ல பிரதேசத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட (Bபத் தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) நேரடிக் கண்காணிப்பின் கீழ் சுகாதாரமான முறையில் நடத்தப்படவுள்ளன. 


மேலும், ஸ்ரீ பாத (சிவனொளிபாத மலை) மாதிரி வடிவம் உள்ளடங்கலாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சுமார் 20 வெசாக் தோரணங்களுக்கான பொலிஸ் அனுமதியும் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


​மேற்படி கூட்டத்தில்  அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ருவன் மாபலகம, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரம்ஸான், அத்தனகல்ல பிரதேச சபைத் தவிசாளர் தர்ஷன விஜேசிங்க, உப தவிசாளர் சந்திமால் விஜேசிங்க உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர் புபுது கபுருகே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Source :







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)