கம்பஹா மாவட்ட சிறுவர் சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம்

Rihmy Hakeem
By -
0



சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கம்பஹா மாவட்ட சிறுவர் சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டம், கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே தலைமையில் அண்மையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


​மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதேச சிறுவர் சபைகளின் முக்கிய பதவிகளை வகிக்கும் சிறுவர்கள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளுடன் செயல்படும் சிறுவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


​நிகழ்வில் உரையாற்றிய கம்பஹா மாவட்டச் செயலாளர்/மாவட்ட அரசாங்க அதிபர் லலிந்த கமகே, சிறுவர் பாதுகாப்பு, சரியான இணையப் பயன்பாடு, சிறுவர்களின் பிரச்சினைகள், சிறுவர் பருவத்தில் வாழ்க்கையைத் திட்டமிடுதல் மற்றும் நேர மேலாண்மை குறித்துச் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அவர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கான பயனுள்ள வழிகாட்டல்களையும் வழங்கினார். மேலும், மாவட்ட சிறுவர் சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


​கம்பஹா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பல வருடங்களாகச் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜா-எல மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்த திருமதி சந்தியா ராணி பெரேரா மற்றும் திருமதி சுஜீவா வெலிகும்புற ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.


​இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி உபேக்ஷா கபுருபண்டார, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி திரு. சமீர பண்டார உட்பட 13 பிரதேச செயலகப் பிரிவுகளின் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


​மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)