திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கல்வி முன்னேற்றம், ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில், “Save Al Azhar” என்ற தொனிப்பொருளில் விசேட பொதுக்கூட்டம் நேற்று (02) இரவு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இதுவரை OBA மற்றும் SDEC ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாடசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பான தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலையின் வளப்பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இப்பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு கலந்துகொண்டவர்கள் உறுதியளித்ததுடன், “Save Al Azhar Committee” என்ற குழுவொன்றை அமைத்து, அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிறைவேற்றுக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
மாணவர்களின் கல்வி, எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயம் குறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லாமை, அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் எதிர்காலம் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
பாடசாலையின் கல்வி முன்னேற்றம் என்பது பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பொறுப்பு மட்டுமன்றி, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முழு சமூகத்தினதும் கூட்டு பொறுப்பாகும் என்ற அடிப்படையில், எதிர்கால நடவடிக்கைகளில் சமூகத்தின் பரந்தளவிலான பங்களிப்பு அவசியம் என இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Thanks - Thihariya News









