நிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலய புதிய கட்டட திறப்பு விழா - படங்கள்குவைத் நாட்டு தனவந்தர் அஹமட் சாலி அல்கந்தரி அவர்களின் நிதியுதவியில் கம்பஹா மாவட்டம், உடுகொட அரபா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாடி வகுப்பறைக் கட்டிடம், தனவந்தர் அல்கந்தரி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் இன்று (23) மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, மாகாண சபை உறுப்பினர்களான ஷாபி ரஹீம், உபுல் மகேந்திர, அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் ப்ரியந்த புஷ்பகுமார, அல் ஹிமா சேவை நிறுவனத்தின் செயலாளர் அல்ஹாஜ் நூறுல்லாஹ்,  பாடசாலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


8


Share:

ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Share:

நிட்டம்புவ, உடுகொட அறபாவின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை

உடுகொட அறபாவின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை                                                                                                                                   
                                                         
நிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை (23) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக்கட்டிடம் குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரியின் நன்கொடையின் கீழ் இலங்கையில் இயங்கும் அல் ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிககளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முதல் மாடியே இவ்வாறு பெரு விழாவின் மத்தியில் திறந்து வைக்கப்படுகின்றது.

இவ்விழாவில் பிரதம அதிதிகளாக குவைட் நாட்டின் தனவந்தர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தாரி கலந்து சிறப்பிக்கவுள்ளார். விசேட அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீமும், ஏனைய அதிதிகளாக மாகாண, வலய மட்ட கல்வி உயர் அதிகாரிகளும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Share:

ஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட மடவளை சுல்பி நானா..

காலம்:- 22-02-2019/வெள்ளி/ காலை 8:20

இன்று மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும்
பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பேரின மதகுரு திடிரென வாந்தி, வாயில் நுரை தள்ள, கண்கள் செருகிய நிலையில் சுயநினைவை இழந்து சீட்டில் பக்கவாட்டில் சரியும்போது அவருக்கு இரண்டு சீட்கள் தாண்டி இருந்த நான் துரிதமாக எழுந்து அவரைத் தாங்கிப் பிடித்தேன்.

அவரை கைகளில் தாங்கியபடி முதுகில் தட்டி பேச்சுக்கொடுத்து சுயநினைவை அடையச் செய்தேன். தொடர்ந்து (சளியுடன கூடிய) வாந்தி எடுத்து சுயநினைவை அடைந்தார். அதிக சளித்தொல்லையால் சாப்பாடும் சமிபாடைந்திருக்கவில்லை. பேக் ஒன்றை பெற்று வாந்தியை எடுக்க உதவினேன். அவர்மேல் படிந்திருந்த வாந்தியை வாய் முதற்கொண்டு துடைத்து விட்டேன்.

நான் கவனித்த வகையில் நானும் இன்னொருவரும் தான் முஸ்லிம்கள். பஸ்ஸில் அனைத்து சீட்களும் நிரம்பி நின்று கொண்டும் சிலர் பயணித்தனர். இருந்தாலும் ஒருவரும் உதவ முன்வரவில்லை.

 உதவுங்கள் உதவுங்கள் என்று சொன்னார்களே தவிர. உடன் வந்திருந்த 25 வயதையொத்த மதகுருவும் என்ன செய்வதென்று திகைத்து நின்றாரே தவிர ஒத்துழைக்கவில்லை.

#இருந்தாலும் ஆச்சரியம் கலந்த வெட்க உணர்வு அவர்கள் முகத்தில் விளங்கியது. பலர் போட்டோ/வீடியோ எடுப்பதும் விளங்கியது.#
பஸ் கண்டியை அடைந்ததும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முச்சக்கர வண்டியில் ஏற்றி நானும் ஏற முற்பட்டபோது மதகுருவுடன் துணைக்கு வந்திருந்த மதகுரு தங்களுக்கு சமாளித்துக்கொள்ள முடியும் என்றதும் ஓட்டுனரிடம் 100/= யை கொடுத்து வழியனுப்பினேன்.

வாந்தி பையை பஸ்ஸில் எனக்கு ஒத்தாசைக்காக பக்கத்தில் நின்ற பாரூக் நானாவிடம் ( மடவளை பங்களா கெதரயில் திருமணம் முடித்த கண்டியை சேர்ந்தவர்) கொடுத்து கழிவுத் தொட்டியில் போடும்படி கூறினேன்.
பஸ்ஸை விட்டிரங்கிய மக்கள் தங்கள் பாட்டில் விரையும் நிலையில் பெண்கள் சிலர் என்னை சூழ்ந்து நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதிகமான நம் இனத்தவர் இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை என்பது வேதனையாக இருப்பதாகவும் கூறினர்.

கற்ற பாடம்;
#சூழ்நிலையை விளங்கிக் கொள்ளல்
#அவசரமாக இயங்குதல்
#உதவிகள் இல்லாதபோது எவ்வாறு சமாளிப்பது?
#முடிந்தளவு பிறர் உதவியை நாடல்
#எனக்கென்ன வென்று பின் வாங்காதிருத்தல்.
இவற்றிற்கு மேலாக , இரக்க சுபாவம், உதவி செய்யும் பண்பு என்பன குலம் கோத்திரம் ஜாதி மதம் நிறம் என்பவற்றைத் தாண்டிய மனிதநேயம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் குடிகொண்டு நடைமுறைப்படுத்தினால் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை (ஓரளவாவது) உருவாக்கலாம்.

பூரண மனத்திருப்தியுடன் இன்றைய நாள் அமையப்பெற்றதற்கு காரணமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்!

சுல்பி சமீன்.
22-02-2019

(நன்றி - மடவளை நியூஸ்)
Share:

தாவூத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Rising Stars Yellow அணி சம்பியன்

(அஜ்மல் - கஹட்டோவிட்ட)

நீர் கொழும்பு Rising stars விளையாட்டுக் கழகத்தினர் தனது ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்த தாவூத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமை நீர் கொழும்பு சென்மிசல்ஸ் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

விறுவிறுப்பாக இடம் பெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு Rising stars yellow மற்றும் Rising stars green அணியினறும் தெரிவாகினர்.
06 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Rising stars yellow அணியினர் ஒரு விக்கெட்டினை  மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு ஆடிய green அணியினர் 4.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

67 ஓட்டங்களால் yellow அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக  சியாஸும்,போட்டித்தொடரின் சிறந்த வீரராக தஹ்ராபும் சிறந்த பந்து வீச்சாரராக சப்ரானும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் பிரதம அதிதிகலாக நீர் கொழும்பு பிறாந்திய முன்னால் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் அல்ஹாஜ் தாஜுதீன் மற்றும் அல்ஹாஜ் அஷ்ரப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியினை திறன்பட நடாத்துவதற்கு Katunayaka glass house உறிமையாளர் அல்ஹாஜ் பிர்தெளஸ் அவர்களும் நாத்தாண்டிய new fancy jewelers உரிமையாளரும் rising stars ஸ்தாபகத்தலைவருமான அல்ஹாஜ் பாரிஸ் அவர்களும் பூரண அனுசரனை வழங்கினர்.Share:

இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் பேருவளையில் ஆரம்பம்
பேருவளை  ஆதார  வைத்தியசாலையில் நேற்று  [21.02.2019] இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.
[ஊடகப் பிரிவு]
Share:

சுயதொழில் மேம்பாட்டிற்கான டிரக் வாகனம் பெற்றுக்கொள்வதற்கான உதவி திட்டம்

சுயதொழில் மேம்பாட்டிற்கான டிரக் வாகனம் பெற்றுக்கொள்வதற்கான உதவி திட்டம்

கௌரவ மேல்மாகான சபை உறுப்பினர் திரு. அர்ஷாட் நிஸாம்டீன் மற்றும் கௌரவ கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு.ஆ.ஐ.ஆ அனாஸ் அவர்களின்.
ஆதரவுடன் உங்கள் சுயதொழிலை மேம்படுத்தி கொள்வதற்கும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்வதற்கும் இலகுவான முறையில் டிரக் வாகணம் பெற்றுக் கொள்வதற்கான வழி !

நிரந்தர தொழில் வாய்ப்பு இல்லாவிடினும் உங்களுக்கான டிரக் வாகனம் பெற்றுக்கொள்வதற்கான் தருணம்.

Share:

டாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம்

டாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம்


( மினுவாங்கொடை நிருபர் )

   அமைச்சர் றிஷாட் பதியுதீன்  அமைப்பின் ஏற்பாட்டில்,  இல்ஹாம் மரிக்காரின்  ஆலோசணையின் பேரில்,   100  மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்  அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
   நாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் இருந்தாலும், இவர்களுக்கு  உயர்கல்வியைத்  தொடர்வதற்கு பொருளாதாரம் ஒரு முட்டுக்  கட்டையாக அமைந்து விடுகின்றது.
                                                                                                                            இதனைக் கருத்திற்  கொண்டு,  கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வழிகாட்டலுக்கு அமைவாக, இத்  திட்டத்தினை   கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனதினால்  செயற்படுத்தபடுகின்றது .       

                                                                   இத்திட்டத்தின் மூலமாக  100  மாணவர்களுக்கு இலவசமாக  உயர்கல்வியினைத்  தொடர்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. நாட்டில் எத்தனையோ உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும்,  இப்படியான வறிய மாணவர்களைக்  கண்டு கொள்வதில்லை.எனவே,  இவ்வாறான மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத் வதுடன், ஏனைய  உயர்கல்வி  நிறுவனங்களுக்கும் ஒரு  முன்னோடியாகவும் இருப்பதில் பெருமிதம் அடைவதாக,  நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம்  மரைக்கார் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.

   இந் நிகழ்வானது,  தெஹிவளை எஸ்.டி.எஸ்.
ஜயசிங்க மண்டபத்தில், அண்மையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக,   மேல் மாகாண ஆளுநர்  ஆஸாத் சாலி , விசேட அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், மேல் மாகாண சபை உறுப்பினர்  எம். பாயிஸ், சிறப்பு விருந்தினர்களாக அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் ஆலோசகர் உல்ரிக்கா, சட்டத்துறை விவுரையாளர் சட்டத்தரணி சர்டீன், மருத்துவத் துறை கல்வி ஆலோசகர் பைசீன் சுபைர், மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் எப்.எம். ஷரீக்,  கொழும்புப்  பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ், வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ரூமி, வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஸியாத்,  படைத்துறை பணித்தலைவர்  முஹம்மத்,  பேருவளை மாநகர சபை உறுப்பினர்களானா கசீப் மரைக்கார்,  முஹம்மட் இஷாம், ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மொஹமட் ரியாஸ் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

இத்திட்டத்தை,  மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  இத்திட்டமானது,  இந்தியாவின்  முன்னாள்  ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நினைவாக,  இல்ஹாம் மரைக்காரின் ஆலோசணையின் பேரில்,  அமேசன் உயர்கல்வி நிறுவனத்தினூடாக அமுல் படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.            

   தகுதியான மாணவர்கள்,  இப்புலமைப்  பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்களின் பெயர்கள்,  பாடநெறியின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை, 076 520 4604, 076 520 4605 ஆகிய  இலக்கங்களுக்கு குறுந்தகவல் மூலமோ அல்லது வட்ஸ்அப் மூலமோ அனுப்ப முடியும். 

 ஒருவர் ஒரு பாடநெறிக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
 Certificate  in Counselling&Psychology, 
Child Psychology, Teacher Training, Business Management, Spoken English, AMI, Marketing Management, Accounting, Islamic Banking ஆகிய பாடநெறிகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. 

இப் பாடநெறிகளின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுமென, கல்விநிலையப் பதிவாளர் சில்மியா யூசுப் தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Share:

தலைநகர் முஸ்லிம்களின் நீண்டகால தேவையாக இருக்கும் மையவாடிப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்


25000 இற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திற்குள் மையவாடிக்கான இடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  கோட்டே மாநகர சபை உறுப்பினர் அலி உதுமான் கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபை அமர்வின் போதே அவர் இக் கோரிக்கையை விடுத்தார். மாநகர எல்லைக்குள் இரு ஜும்ஆ பள்ளிவாசல்களும், மூன்று அஹதிய்யா பாடசாலைகளும் காணப்படுகின்றன. ஆனால் எமது மக்களுடைய நீண்டகால தேவையாக இருப்பது மையவாடி ஒன்றாகும்.

மக்கள் மரணித்தவர்களை அடக்கம் செய்ய தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால் பாரிய செலவுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

இதற்காக நாம் பல்வேறு தரப்பினர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் பலனில்லை. முஸ்லிம்களுக்கு மையவாடி அமைத்து தருகிறோம் என்று வாக்குகளை கேட்டவர்கள், வெற்றியின் பின் மறந்து விட்டனர்.

இதற்கு முன்னர் வந்த மேயர்களிடம் இது தொடர்பாக பல கடிதங்கள் கொடுத்தோம். அவர்கள் கடிதத்தை வாங்கி வாக்குறுதிகளை தந்தாலும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் உண்மை.


அதனால் அவர்களுக்காக எமது ஆளுகைக்குள் உள்ள பிரதேசத்தில் மையவாடி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.Share:

ரவி, மனோ, அஸாத் சாலி ஆகியோர் ஞானசாரவை சந்தித்தனர்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(தமிழ் மிரர்)
Share:

மீரிகம வைத்தியசாலையில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது


மீரிகம வைத்தியசாலையில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரால் நேற்று [201.02.2019] நட்டு வைக்கப்பட்டது.

[ஊடகப் பிரிவு]
Share:

மீன்பிடி படகுகளை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஓட்டுனர்களுக்கு ஆயுட்கால தடை

மீன்பிடி படகுகளுக்கான அனுமதிப் பத்திரம் பெற்று, அதனை சட்ட விரோத செயல்களுக்காக பயன்படுத்துபவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அனுமதிப் பத்திரம் பெறத் தடை விதிக்கும் தீர்மானம் நேற்று (20) எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை செயற்படுத்த அவசியமான சட்ட திட்டங்களை உடனடியாக செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு  வேண்டுகோள் விடுத்தார். 

நேற்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மீன்பிடி படகு உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்த நாயக்க, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கீகனகே உள்ளிட்ட உயரதிகாரிகள், மீன்பிடி படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டோர் தெரிவித்தது, படகு ஓட்டுனர்கள் செய்யும் குற்றங்களுக்கு உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் அவல நிலை இடம்பெறுகிறது என்பதாகும். இதன் போது இராஜாங்க அமைச்சர், குற்றம் செய்தவரை தப்பிக்க விட்டு விட்டு, நிரபராதியை தண்டிக்கும் இம்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிக்கு உயர்ந்த தண்டனையை வழங்குவதற்காக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
"இந்த ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க மேற்கொண்ட இராஜ தந்திர செயற்பாடுகள் தற்போது வெற்றியை தந்துள்ளன. 

அதனால் தான் சட்டவிரோதமாக மீன்பிடி படகுகளின் மூலம் பிரான்ஸ் இற்கு போன குழுவில் 64 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகும்.

எமது அடுத்த முயற்சி இவ்வாறான கடத்தல் காரர்களை இனங்காண மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தலையீடு செய்து தடுப்பதற்கு வசதியாக APP ஒன்றை அறிமுகம் செய்வதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் சட்டவிரோத செயல்களை குறைப்பது மற்றுமொரு நோக்கமாகும். இத்திட்டம் மிகவும் வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

மற்றையது, படகு ஓட்டுனருக்கு (ஸ்கிப்பர்) எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பானது. படகு உரிமையாளருக்கும், ஓட்டுனருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பது போன்று ஓட்டுனருக்கும் கடற்றொழில் திணைக்களத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த திட்டமாகும்.

இதன் கீழ் படகு ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கவுள்ளோம். ஆட்கடத்தல் அல்லது சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் படகு ஓட்ட முடியாதவாறு அவர்களது அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்" என்று மேலும் தெரிவித்தார்.Share:

நீர் வழங்கல் திட்டங்கள் முடியுமானளவு இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்


நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

பதுளை மாவட்டத்தில் நேற்று (19) பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

பதுளை மாவட்டத்தில் 20 மில்லியன் ரூபா செலவிலான பென் ஹெட் குடிநீர் வழங்கல் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 100 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. அத்துடன் திறந்துவைக்கப்பட்ட, 21.5 மில்லியன் ரூபா செலவிலான ரஹூபொல குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 200 குடும்பங்களும், 54.6 மில்லியன் ரூபா செலவிலான யாலகமுவ குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 260 குடும்பங்களும் நன்மையடையவுள்ளன. 

பதுளை மாவட்டத்தில் உமா ஓயா திட்டத்தினூடாக 530 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் டயரபா நீர்த் தேக்கத்தின் மூலம் பண்டாரவளை, தியத்தலாவ, ஹப்புத்தளை, மிராஹாவத்த ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், வேவிகம குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார். 

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பொரகஸ் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார். 41.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 குடும்பங்கள் பயனடையவுள்ளன. 

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் நீண்டகால போராட்டத்தின் மூலமே தங்களது உரிமைகளை படிப்படியாக வென்று வருகின்றனர். இந்திய அரசுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னரே அடிப்படை உரிமையான வாக்குரிமை வழங்கப்பட்டது. 

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பதுளை மாவட்டத்தில் இருவர் உட்பட தற்போது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பிரதிநிதித்துவம் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். உங்களுக்குப் பொறுத்தமானவர்களை தெரிவுசெய்தால்தான், அவர்கள் அபிவிருத்திகளை மக்கள் காலடிக்கே கொண்டுவருவார்கள். 

விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவரும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை. சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இதன் பாரதூரங்களை அறித்து எதிர்த்து வருகின்றன. பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றார். 

இந்நிகழ்வில் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், வெலிமடை பிரதேச சபை பிரதி தவிசாளர் சீதா சமரவீர, பதுளை மாவட்ட கட்சி அமைப்பளாளர் தாஜுதீன், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், சபையின் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Share:

இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரிப்பு - சவுதி இளவரசர் உறுதி


10 லட்சம்  மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

பின்னர், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை கூடுதலாக 35 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த (2018) ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய சவுதி அரசு அனுமதி அளித்தது.

இதனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.

இந்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பல மாநில அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசும் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றார்.

இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இளவரசர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இங்கிருந்து 2 லட்சம் முஸ்லிம்கள் இனி ஹஜ் யாத்திரை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:
sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here